தூத்துக்குடி கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வ மகள் சேமிப்பு திருவிழா

தூத்துக்குடி கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட திருவிழா நடந்து வருகிறது. அக்டோபர் 11-ந் தேதி வரை இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் சேர்ந்து பயனடையலாம்.

Update: 2022-09-18 18:45 GMT

தூத்துக்குடி கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட திருவிழா நடந்து வருகிறது. அடுத்தமாதம் 11-ந் தேதி வரை இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் சேர்ந்து பயனடையலாம்.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செல்வமகள் திட்டம்

உங்கள் செல்ல மகளின் வளமான எதிர்காலத்திற்கான மிகச்சிறந்த சேமிப்புத் திட்டம் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்திய அரசு பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் தூத்துக்குடி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் திருவிழாவாக செயல்படுத்தப்படுகிறது. அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த கணக்கை ரூ.250 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் துவங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்த பட்ச தொகை ரூ.250-ம் அதிக பட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கணக்கில் செலுத்தலாம். அசலுடன் சேர்ந்து வட்டியும் அடுத்த வருட அசலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போதைய வட்டி 7.6 சதவிகிதம் ஆகும். கணக்கில் செலுத்தும் தொகை வட்டி மற்றும் முதிர்வு தொகை என அனைத்திற்கும் பிரிவு 80- ன் படி பெற்றோர்கள் வருமான வரிவிலக்கு பெறலாம்.

திருமணத்திற்கு முழுதொகை

செல்வமகள் சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை 10–ம் வகுப்பு முடிந்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்பிற்காக 50 சதவிகித தொகையைப் பெறலாம். பெண் குழந்தையின் திருமணத்தின் போது முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.

எனவே இந்த செல்வமகள் சேமிப்புத் திருவிழாவில் பங்கேற்று உங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்கி பயன்பெறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்