தூத்துக்குடி மாவட்டத்தில்கஞ்சா விற்பனை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: போலீஸ் சூப்பிரண்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-21 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் மொத்தம் 61 பேர் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆபரேசன் கஞ்சா 3.0 மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் போலீசார் நேரடியாக ஆய்வு செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த முயற்சியின் காரணமாக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

306 பேர் கைது

இதில் 306 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 695 கிலோ கஞ்சா, 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆபரேசன் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் புகார் அளிக்க சிறப்பு எண்களும் வெளியிடப்பட்டு உள்ளன. தற்போது கஞ்சா விற்பனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்