திருச்சியில் மாநில அளவிலான விவசாய கண்காட்சி
திருச்சியில் மாநில அளவிலான விவசாய கண்காட்சி வருகிற 27-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது;
திருச்சியில் வருகிற 27-ந் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான விவசாய கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) வே.பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விவசாய கண்காட்சி
தமிழக அரசால் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் எந்திரங்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் பயன்பெறும் வகையில் திருச்சியில் மாநில அளவிலான விவசாய கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் வேளாண் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெருக்கும் வகையில் வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டும் தொழில் நுட்பங்கள், பாரம்பரியம் மிக்க மரபு சார் தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் எந்திரங்கள், பசுமைகுடில் தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிறபயிர் ரகங்கள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், கருத்தரங்கங்கள் பி.எம் கிசான் பதிவுமையம், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
முன்பதிவு
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். கண்காட்சியில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசம். மேலும், விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கண்காட்சி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்புவோர் agriexpo2023.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.