திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,234 மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 3,234 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2023-05-07 16:58 GMT



திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 3,234 மாணவ, மாணவிகள் எழுதினர்.

'நீட்' தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். இந்த 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

2023-24-ம் கல்வி ஆண்டிற்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சாஷம்மாள் வித்யா மந்திர் பள்ளி, எஸ்.கே.பி. வனிதா இன்டர்நேஷனல் பள்ளி, எஸ்.கே.வி. இன்டர்நேஷனல் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ஆரணி அத்திமலைப்பட்டு துலிப் இன்டர்நேஷனல் பள்ளி, கண்ணம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பள்ளி, ஆல் இன்டியா மார்டன் பள்ளி என 8 மையங்களில் 3 ஆயிரத்து 288 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் திருவண்ணாமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி 'நீட்' தேர்வு விடைத்தாள் ஒட்டுமொத்த சேகரிப்பு மையமாக அமைக்கப்பட்டு உள்ளது.

முக கவசம் 



தேர்வு எழுதும் மையங்களுக்கு காலை 11 மணியில் இருந்து மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மைய நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகளை சோதனை செய்து, 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களுக்கு நுழைவு வாயிலில் புதிய முக கவசம் வழங்கப்பட்டது. பேனா, செல்போன், கை கடிகாரம், கம்மல் போன்றவற்றை அணிந்து செல்ல அனுமதி அளிக்கப்பட வில்லை.

பின்னல் சடையுடன் வந்த மாணவிகளை சடை பின்னலை கலைத்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் மாணவிகள் தலைவிரி கோலமாக தேர்வு மையங்களுக்குள் சென்றனர்.

தொடர்ந்து தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரம் அலுவலர்கள் மூலம் செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னரே தேர்வு அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காத்திருந்த பெற்றோர்கள்

முன்னதாக மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையை பார்த்து தங்களுக்கான தேர்வு அறை எண்ணை கண்டறிந்தனர். தேர்வு மையங்களின் முன்பு தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் காத்திருந்தனர்.

முன்னதாக அவர்கள் தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். தேர்வர்கள் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை.

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. 3,234 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 54 பேர் எழுதவில்லை. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகளை தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்த அவர்களது பெற்றோர்கள் உற்சாகமாக அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்