திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.;
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
திருவள்ளூர், பொன்னேரி, அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 371 பள்ளிகளில் உள்ளடங்கிய 138 தேர்வு மையங்களில், 20 ஆயிரத்து 178 மாணவர்களும், 22 ஆயிரத்து 230 மாணவிகளும் என மொத்தம் 42 ஆயிரத்து 408 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவர்கள் 18 ஆயிரத்து 376 பேரும், மாணவிகள் 21 ஆயிரத்து 319 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.60 சதவீதம் ஆகும்.
இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 91.07 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 95.90 விழுக்காடு ஆகும். 371 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பூந்தமல்லி பார்வை குறைபாடு உடைய மாணவர்கள் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 84 மாணவர்களும், 23 ஆயிரத்து 118 மாணவிகளும் என மொத்தம் 40 ஆயிரத்து 202 பேர் எழுதினர். அவர்களில் 47 ஆயிரத்து 996 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இது 84.74 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 93.38 ஆகும். 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த தேர்ச்சி விழுக்காடு 88.97 சதவீதம் ஆகும்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இனியும் உண்டு. கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பூபாலமுருகன், (மேல்நிலைப்பள்ளி), தேன்மொழி (இடைநிலைப்பள்ளி), மாவட்ட கல்வி அலுவலர்கள் எல்லப்பன், ராதாகிருஷ்ணன், அருள் அரசு, செல்வகனேசன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.