தூத்துக்குடியில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான லாரிகள் சரக்கு ஏற்றி வந்து செல்கின்றன. நேற்று முன்தினம் துறைமுகத்தின் 8-வது கப்பல் தளத்தில் ஒரு தொழிலாளி இறந்ததால், இரவில் லாரிகள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஏராளமான லாரிகள் துறைமுக நுழைவாயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அப்போது லாரி டிரைவர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம்
இதையடுத்து ஜனநாயக தரைவழி போக்குவரத்து ஓட்டுனர், பொது தொழிலாளர் நலச்சங்கத்தினர் தலைவர் சகாயம் தலைமையில் அங்கு திரண்டு வந்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு குடிநீர், கேண்டீன், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பாஸ் வழங்குவதற்கான கவுன்ட்டர்களை அதிகரித்து காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். சி.எப்.எஸ்.-ல் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளை 3 மணி நேரத்தில் இறக்கி, ஏற்றி காலதாமதம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு, டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வ.உ.சி. துறைமுக உதவி போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம், அரவிந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லாரி டிரைவர்களின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மதியம் லாரி டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.