திருவையாறில், மேளதாளம் முழங்க மலர்தூவி வரவேற்ற பொதுமக்கள்
பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை மேளதாளம் முழங்க, மலர் தூவி பொதுமக்கள் வரவேற்றனர்.;
திருவையாறு:
தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும், அங்கிருந்து கடந்த 27-ந் தேதி அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர். இந்தநிலையில், கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறை நேற்று வந்தடைந்தது.
மலர் தூவி வரவேற்பு
இதனால், மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் திருவையாறு காவிரி புஷ்பமண்டப படித்துறை, செவ்வாய்க்கிழமை படித்துறைகளில் மேளதாளம் முழங்க காவிரி தாய்க்கு சூடம் ஏற்றி வணங்கினர். பின்னர், தண்ணீரில் பால் ஊற்றியும், மலர் தூவியும் வரவேற்றனர்.
திருக்காட்டுப்பள்ளி
இதேபோல, கல்லணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது காலையிலும் மாலையிலும் நிலைமைக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 3,107 கன அடி, வெண்ணாற்றில் 3,820 கன அடி, கொள்ளிடத்தில் 727 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தென்பெரம்பூரில் உள்ள வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு தலைப்பில் இருந்து வெண்ணாற்றில் மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு உள்ள மற்ற ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கச்சமங்கலம் கிராமத்தில் உள்ள தடுப்பணையில் ஆர்ப்பரித்து சென்றது. அதேபோல தென்பெரம்பூர் வெண்ணாறு- வெட்டாறு தலைப்பில் வெண்ணாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இரைச்சலுடன் வெளியேறிக்கொண்டு உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.