தேனி மாவட்டத்தில்கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும்:குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-04-21 18:45 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்படி, தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் பேசும்போது, தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும். நிலங்களில் தண்ணீர் தேக்கும் வகையில் நிலங்களை சமப்படுத்தி குழிகள் ஏற்படுத்த வேண்டும்.

தேங்காய் கொள்முதல்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெள்ளைப் பூண்டு வடுகப்பட்டி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு இந்த ஆண்டு செஸ் வரி விதிக்கவில்லை. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவிற்கு வியாபாரம் நடக்கிறது. எனவே இதற்காக தனி அதிகாரி அமைத்து எவ்வளவு வியாபாரம் நடக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன்:- தேனி மாவட்டத்தில் இலவம் பஞ்சுகள் கொள்முதல் தொகை மிகவும் குறைவாக உள்ளது. பிற மாவட்டங்களில் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் வியாபாரிகள் சேர்ந்து விலையை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோன்று தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நடவடிக்கை

இதையடுத்து பேசிய கலெக்டர் தங்களது கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் சங்கர், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்