தேனி மாவட்டத்தில்மகளிர் உரிமைத்தொகை பெற 2¾ லட்சம் பேர் விண்ணப்பம்சிறப்பு முகாம்கள்: நாளை நிறைவு
மகளிர் உரிமைத்தொகை பெற 2¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு முகாம்கள் நாளை நிறைவு பெறுகிறது.;
மகளிர் உரிமைத்தொகை
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது.
தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் 259 இடங்களில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி கடந்த 4-ந்தேதி வரை நடந்தது.
இதில், பெரியகுளம் தாலுகாவில் 46 ஆயிரத்து 833 விண்ணப்பங்கள், உத்தமபாளையம் தாலுகாவில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 684 விண்ணப்பங்கள் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 517 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தேனி, போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் கடந்த 5-ந்தேதி சிறப்பு முகாம்கள் தொடங்கியது. 258 இடங்களில் இந்த முகாம்கள் நடந்து வருகின்றன. இந்த முகாம்கள் நாளை (புதன்கிழமை) நிறைவு பெறுகின்றன.
2¾ லட்சம் விண்ணப்பங்கள்
இதுவரை தேனி தாலுகாவில் 41 ஆயிரத்து 415 விண்ணப்பங்கள், ஆண்டிப்பட்டி தாலுகாவில் 50 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள், போடி தாலுகாவில் 41 ஆயிரத்து 617 விண்ணப்பங்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 505 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
5 தாலுகாவிலும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 22 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் சுமார் 4½ லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்ப படிவங்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் பலர் விண்ணப்பிக்க முன்வரவில்லை. இந்த உரிமைத்தொகை பெற தகுதி மற்றும் தகுதியின்மை குறித்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே தகுதியின்மை என்ற பட்டியலுக்குள் வரும் மக்கள் தாங்களாகவே விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.