விழுப்புரத்தில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

விழுப்புரத்தில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார். அவரது உடலை வெகுநேரம் கழித்தே போலீசார் கண்டுபிடித்தனர்

Update: 2022-06-17 17:23 GMT

விழுப்புரம்

கார் மோதல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 38), நெல் அறுவடை எந்திர டிரைவரான இவர் நேற்று முன்தினம் தனது மகன் ஆகாஷ் (17), பிடாகத்தை சேர்ந்த உறவினர் பாபு மகன் கிஷோர் (14) ஆகியோருடன் ஒரு மொபட்டில் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த கார் ஒன்று திடீரென அவர்களது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கிஷோரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஒருவர் சாவு

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆகாசும், கிஷோரும் மட்டுமே மொபட்டில் வந்ததாக நினைத்து போலீசாரும், உறவினர்களும் கருதினர். பின்னர் இரவில் கிஷோரை முருகதாஸ் அழைத்துச்சென்றதாக அவரது உறவினர்கள், போலீசாரிடம் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து போலீசார், இரவு 9 மணிக்கு மேல் ஜானகிபுரம் பகுதிக்கு விரைந்து சென்று முருகதாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள முட்புதரில் முருகதாஸ் இறந்து கிடந்தார். கார் மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட முருகதாஸ் அங்குள்ள முட்புதரில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து முருகதாசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்