நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள்- உபகரணங்கள் கொள்ளை

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-10-22 19:00 GMT

பாதிக்கப்பட்ட மீனவர்கள் 

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது60). மீனவர். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மதியழகன் (55), நெடுஞ்செழியன் (58) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக எல்லைக்குள் வந்து மீனவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களிடம் இருந்து 80 கிலோ மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன், பேட்டரி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக்கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர்.

போலீசார் விசாரணை

இந்த நிைலயில் நேற்று காலை ஆறுகாட்டுத்துறைக்கு கரை திரும்பிய மீனவர்கள் மீனவ பஞ்சாயத்தாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். கடலோர காவல் குழும சப்- இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ஆறுகாட்டுத் துறை கடற்கரைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சேர்ந்த கடற்படையினரும், கடற்கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்