அரசு பள்ளி மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்;

Update: 2022-10-29 21:39 GMT

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

புதுமை பெண் திட்டம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்' கீழ் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு, பட்டப்படிப்பு, தொழில் கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த மாணவர்கள் ஏற்கனவே பிற கல்வித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

விண்ணப்பம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற https://puthumaipenndev.tnega.org/demo/ என்ற இணையதளத்தில் தங்கள் கல்வி நிறுவனங்களின் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு மாநில பாரத வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கிகளில் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் வருகிற 19-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்