குற்றாலத்தில் இதமான சாரல் மழையில் மனம் குளிர்ந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் இதமான சாரல் மழையில் மனம் குளிர்ந்த சுற்றுலா பயணிகள் அருவிகளிலும் ஆனந்தமாக குளித்தனர்.

Update: 2022-08-07 13:31 GMT

குற்றாலத்தில் இதமான சாரல் மழையில் மனம் குளிர்ந்த சுற்றுலா பயணிகள் அருவிகளிலும் ஆனந்தமாக குளித்தனர்.

குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்றும் வீசும்.

இந்த சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.

சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

இந்த ஆண்டு சீசன் காலதாமதமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் அருவிகளை வேடிக்கை பார்த்து சென்ற வண்ணம் இருந்தனர்.

கடந்த 5 நாட்கள் தடைக்கு பின்னர் நேற்று முன்தினம் மெயின் அருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனந்த குளியல்

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அனுமதி அளித்தார்.

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வெயில் இல்லை. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று இடைஇடையே பெய்த இதமான சாரல் மழையில் மனம் குளிர்ந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே இருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்