மாவட்டத்தில்ஒரு ஆண்டுக்கு பிறகு கொரோனாவுக்கு முதியவர் பலி;புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி
மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு கொரோனாவுக்கு முதியவர் பலியானாா். புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மக்கள் மனதில் மறையாத வடுவாக பதிவாகி விட்டது. குறிப்பாக 2-வது அலையின்போது ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் பலரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்திலும் தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 89 வயது முதியவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மொத்த பலி எண்ணிக்கை 735 ஆக உயர்ந்தது.
மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்தது. இதில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 30 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 59 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.