மாவட்டத்தில் 8 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை
ஈரோடு மாவட்டத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 550 குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில் 57 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
ஈரோடு மாவட்டத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 550 குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில் 57 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காப்பீட்டு திட்டம்
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வைத்து இருப்பவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணங்கள் ஏதுமின்றி சிகிச்சை பெற முடியும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு மருத்துவமனை உள்பட 9 அரசு ஆஸ்பத்திரிகள், 48 தனியார் ஆஸ்பத்திரிகள் என 57 ஆஸ்பத்திரிகளில் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளலாம். 2 நோய் கண்டறியும் ஆய்வகங்களிலும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.
8 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள்
இந்த அடிப்படையில் மாவட்டத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 550 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி முதல் கடந்த 26-ந் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் 46 ஆயிரத்து 658 பேர் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று உள்ளனர். இதற்காக ரூ.102 கோடியே 36 லட்சம் காப்பீட்டு திட்டத்தில் இருந்து செலவிடப்பட்டு உள்ளது.
நெஞ்சுவலி
இந்த திட்டத்தில் பயன் அடைந்த அந்தியூரை சேர்ந்த சின்னமுத்து என்பவர் கூறியதாவது:-
நான் கூலித்தொழிலாளியாக உள்ளேன். 49 வயதாகிறது. எனக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுதொடர்பாக சோதனை செய்தபோது இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு தேவையான சிகிச்சைக்கு போதிய செலவு செய்ய இயலாத சூழலில், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். எனது மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை தமிழக அரசே செலுத்தியது. இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவே நான் இப்போது உயிர் வாழ்கிறேன்.
நலமாக இருக்கிறேன்
பெருந்துறை அருகே விஜயமங்கலத்தை சேர்ந்த சந்தியா கூறியதாவது:-
நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு 37 வயதாகிறது. எனக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சோதனைக்கு சென்றபோது இருதய அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். அங்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தமிழ்நாடு அரசு செலுத்தியது. இப்போது நான் நலமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புகைப்படம் எடுக்கலாம்
இதுபோல் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன்பெற்ற பலரும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறாதவர்கள் ரேஷன்கார்டு நகல், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வருமான சான்று ஆவணத்துடன் தாலுகா அலுவலகங்களில் இயங்கும் காப்பீட்டு அட்டை மையங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கலாம்.
இந்த தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.