தூத்துக்குடி கடலோர பகுதியில்போலீசார் ரோந்து படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்:கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவு

தூத்துக்குடி கடலோர பகுதியில் போலீசார் ரோந்து படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2023-08-22 18:45 GMT

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் போலீசார் ரோந்து படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலோர பகுதிகளில் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன, எவ்வாறு ரோந்து பணிகள் மேற்கொள்கின்றனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

ரோந்து படகு

இதனை தொடர்ந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கடலோர பாதுகாப்பு போலீசாருக்கான ரோந்து படகை பார்வையிட்டார். அனைத்து படகுகளையும் ரோந்து செல்லும் வகையில் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதே போன்று பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கடலோரத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக உளவுப்பிரிவு அதிகாரிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நாளை (வியாழக்கிழமை) காலை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து மீனவ பிரதிதிநிகளுடனும் ஆய்வு மேற்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்