பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க.வில், ரஜினி ரசிகர்கள் இணைகிறார்கள்

பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க.வில், ரஜினி ரசிகர்கள் இணைகிறார்கள்

Update: 2022-06-15 20:04 GMT

பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க.வில், ரஜினி ரசிகர்கள் இணைகிறார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

ரஜினி ரசிகர்கள் இணையும் நிகழ்ச்சி

தஞ்சையில் ரஜினி ரசிகர்கள், பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் வரவேற்றார்.

இதில் மாவட்ட நிர்வாகிகளான கோவை பாலசுந்தர் விஸ்வநாதன், பெரம்பலூர் சண்முகதேவன், விருதுநகர் சக்திவேல், கடலூர் மோகன், திருவாரூர் முருகானந்தம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களை பொன்னாடை போர்த்தி அண்ணாமலை வரவேற்றார். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் பண்ணைவயல் இளங்கோ, முரளிகணேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மோடியின் கரத்தை வலுப்படுத்த...

நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டும் தான் பொருந்தும். அந்த வகையில் அவருடன் 42 ஆண்டுகாலம் பயணித்த ரசிகர்கள் இந்தியாவை நல்ல பாதைக்கு கொண்டு செல்லும் பா.ஜ.க.வில் இணைந்து இருப்பது எங்களுக்கு பெருமை. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்காக பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. ரஜினிகாந்த் கூறியது போல தமிழகத்தில் சிஸ்டம் மிகவும் மோசமாக உள்ளது. அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை லஞ்சம் உள்ளது. லஞ்சத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை தான் உள்ளது. அதை மாற்ற வேண்டியது நமது கடமை.

அதேபோல் மக்கள் மனதிலும் மாற்றம் வந்து விட்டது. அதற்கு ஆன்மிக பாதை வேண்டும். ஆன்மிக பாதையில் பயணிக்கும் மக்களையும் சமமாக நடத்தும் அரசு வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் கட்டாயம் நடக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

ஆன்மிக அரசியல்

ஆன்மிக அரசியலை பா.ஜ.க. வழிநடத்துகிறது. ஆன்மிகம் என்றால் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்துக்கும் சேர்த்துதான் ஆன்மிக அரசியல். இந்த இயக்கம் ஜனநாயகத்தின் தேசிய இயக்கமாக உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு தொண்டரும் தலைவர் தான். எனவே இந்த இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம்.

சில மாநில கட்சிகள் ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, அதற்கு எதிராக நடந்து வருகிறது. பா.ஜ.க. அப்படி கிடையாது, இன்னும் பத்து ஆண்டுகளில் இங்கு இணைந்தவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும்

இவ்வாறு அவர் கூறினார். முடிவில் வெற்றி மாறன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்