அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் 27 பவுன் நகை திருட்டு

அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 27 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.;

Update: 2023-01-31 06:37 GMT

சென்னை திருமங்கலம், கதிரவன் காலனி, 16-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவர், ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்து இருந்த 25 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதேபோல் ராம்குமார் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஜெகநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் நொளம்பூரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.3½ லட்சம் கொள்ளை போனதாக நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த 3 வீடுகளிலும் கைரேகை நிபுணர்கள் நடத்திய சோதனையில் ஒரே நபர்கள்தான் திருடியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்