தூத்துக்குடி, நெல்லையில் நடந்த விபத்துகளில்டிரைவர் உள்பட 4 பேர் பலி

தூத்துக்குடி, நெல்லையில் நடந்த விபத்துகளில் டிரைவர் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.;

Update:2023-10-16 00:15 IST


தூத்துக்குடி, நெல்லையில் நிகழ்ந்த விபத்துகளில் டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்

தூத்துக்குடி அய்யப்பன் நகரைச் சேர்நதவர் பால்பாண்டி. இவருடைய மகன் ஹரி (வயது 26). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி கோயில்பிள்ளை நகரில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு தனது நண்பர் பாலா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பாலா ஓட்டி சென்றார்.

அவர்கள், தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

மேலும் எதிரே தூத்துக்குடி சிலுவைப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த தனியார் மீன்கம்பெனி ஊழியரான வன்னியராஜ் (34), குரூஸ்புரத்தைச் சேர்ந்த ரவி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளின் மீதும் கார் நேருக்கு நேர் மோதி நின்றது.

2 வாலிபர்கள் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஹரி, பாலா, வன்னியராஜ் ரவி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஹரி, வன்னியராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த பாலா அரசு ஆஸ்பத்திரியிலும், ரவி தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் இறந்த ஹரி, வன்னியராஜ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த விஜய்கணேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லோடு ஆட்டோ மீது வேன் மோதல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). டிரைவரான இவர் பழைய லோடு ஆட்டோவை விலைக்கு வாங்கி, அவற்றில் உள்ள பழுதுகளை சரிசெய்து புதுப்பிப்பதற்காக நெல்லையில் உள்ள ஒர்க்ஷாப்பில் விட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் லோடு ஆட்டோவை சரி செய்த பின்னர் அதனை தனது ஊருக்கு ஓட்டிச் சென்றார். அப்போது வெள்ளூரைச் சேர்ந்த வேலுமயில் (46) என்பவரையும் லோடு ஆட்டோவில் அழைத்து சென்றார்.

நெல்லை -திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை அடுத்த ஆச்சிமடம் குளத்துகரை அருகில் சென்றபோது, திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லோடு ஆட்டோ அப்பளம் போன்று நொறுங்கியது. அதில் சிக்கிய ராமச்சந்திரன், வேலுமயில் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று, விபத்துக்குள்ளான லோடு ஆட்டோவில் சிக்கிய ராமச்சந்திரன், வேலுமயில் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன், வேலுமயில் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த மானூர் பள்ளமடை பகுதியைச் சேர்ந்த டிரைவர் அண்ணாவி முத்துவை கைது செய்து நடத்தி விசாரணை வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்