தஞ்சையில், வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.;
இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க கூட்டம்
தஞ்சை வக்கீல்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து விட்டு தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் தியாக.காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் வக்கீல் அன்பரசன், நிர்வாகிகள் நல்லதுரை, குமரவேல், பார்த்திபன், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு பணிகளை புறக்கணித்து விட்டு இன்று (வியாழக்கிழமை) தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டமும், நாளை (வெள்ளிக்கிழமை) கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளனர்.