தஞ்சையில், சுட்டெரிக்கும் வெயில்; 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது

தஞ்சையில், சுட்டெரிக்கும் வெயில்; 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது

Update: 2023-03-27 19:27 GMT

தஞ்சையில் சுட்டெரிக்கும் வெயில் நேற்று 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது.

கோடை வெயில்

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம்நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனர்.

100 டிகிரி கொளுத்தியது

வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வருகிறது. இருப்பினும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

நேற்றும் வெயில் அதிகமாக காணப்பட்டது. தஞ்சையில் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினர்.

இளநீர், நுங்கு விற்பனை

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி விற்பனை நேற்று அதிக அளவில் நடைபெற்றது.தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தற்போது நுங்கு விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தஞ்சை சுற்றுலா மாளிகை, நாகை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. பொதுமக்களும் காத்திருந்து நுங்கு வாங்கிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்