தமிழகத்தில்கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 22 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு: தலைவர் பொன்குமார் தகவல்

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 22 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-08-23 18:45 GMT

தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக 22 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக, நலவாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலாளர் பதிவு குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மற்றும் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை (சமூகபாதுகாப்பு திட்டம்) உதவி ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு 60 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

திட்டங்கள்

அப்போது அவர் பேசுகையில், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் குறைகளை கேட்டு, அதனை உடனுக்குடன் சரி செய்து, நலவாரியத்தில் பதிவை அதிகரித்து நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. தற்போது, தொழிலாளர் இயற்கை மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்திற்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

22 லட்சம்

2010-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 33 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அது கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சமாக குறைந்தது. தற்போது மீண்டும் உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். தற்போது புதிதாக 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம். தொழிலாளர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக தவறான ஆவணங்களை கொடுக்க கூடாது. அதுபோன்று தவறான தகவல் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்படும். நலவாரிய பதிவில் எந்த பிரச்சினை இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையரின் உதவியாளர் சுந்தர வடிவேலு, கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்பட கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தொழிலாளர் நலவாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றை அவர் நட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்