தமிழகத்தில், 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைப்பது உறுதி
தமிழகத்தில், 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைப்பது உறுதி;
கும்பகோணம்
ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில், 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
பேட்டி
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கும்பகோணம் தனி மாவட்டம்
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல போராட்டங்கள் நடந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைத்து பா.ம.க. போராடி வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என கூறினார். பா.ம.க. தொடர்ந்து போராடிய நிலையில் வேலுார் மாவட்டம் மூன்றாகவும், விழுப்புரம் மாவட்டம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்களை திரட்டி போராட்டம்
இதேபோல் காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறிய மாவட்டங்களாக இருந்தால்தான் நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கும்.
எனவே கும்பகோணத்தை விரைவில் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் நானே மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,160 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது. யூரியா நான்கு மடங்கு விலை ஏறியுள்ளது. உற்பத்தி மற்றும் லாபம் 50 சதவீதம் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்தது. இதை அரசு நிறைவேற்ற வேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்தார். ஆனால் தற்போது ஆளும்கட்சியாக மாறிய பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று புரியவில்லை.
மீத்தேன் எடுக்க ஒப்பந்தம்
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் பா.ம.க. தான். ஆனால், தற்போது மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் 31 இடங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதற்கு ஆளும் அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும்.
50 இடங்களில் தடுப்பணைகள்
காவிரியில் கடந்த 2 மாதங்களில் 240 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. வருங்காலங்களில் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் வறட்சி ஏற்படும். இதனால் தமிழக அரசு வறட்சியை போக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி ஒதுக்கி வரும் மழை நீரை சேமிக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
காவிரி, கொள்ளிடம், தென்பெண்ணை, கொசஸ்தலை ஆறுகளில் குறைந்தது 50 இடங்களில் தடுப்பணையை தமிழக அரசு கட்ட வேண்டும்.
2026-ல் பா.ம.க. ஆட்சி அமைப்பது உறுதி
தமிழகத்தில் 55 ஆண்டு காலம் திராவிட ஆட்சியாக இருந்துள்ளது. தற்போது மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர். மற்ற கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வர தொடங்கியுள்ளது.
வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. மற்றும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி. அதற்கு ஏற்ப எங்களின் வியூங்களை அமைப்போம். 2024-ல் அதன்படி செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. மாநில நிர்வாகிகள் ஆலயமணி, ம.க. ஸ்டாலின், மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.