சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 772 பள்ளி வாகனங்கள் இயக்க தடை-ஆய்வுக்கு உட்படுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆய்வுக்கு உட்படுத்தாத 772 பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-06-07 19:24 GMT

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 12-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டும் சேலம் சரகமான சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது வாகனங்களில் அவசர வழி சரியாக உள்ளதா?, முதலுதவி பெட்டி உள்ளதா?, அதில் உள்ள மருந்து காலாவதியாகி உள்ளதா?, வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுவதுடன் அந்த குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

772 வாகனங்கள் இயக்க தடை

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:-

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 2,926 பள்ளி வாகனங்கள் உள்ளன. தற்போது பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2,336 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 2,154 வாகனங்களில் எந்த குறைபாடும் இல்லை. குறைபாடு உள்ள 182 வாகனங்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் வரை அந்த வாகனங்களை இயக்க தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத 590 பள்ளி வாகனங்களும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது பள்ளி வாகன டிரைவர்களுக்கு வாகனங்களை எப்படி இயக்க வேண்டும்? என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்