புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு போனது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி மாதவி தெருவில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 78) இவருடைய மனைவி ரங்கநாயகி (68). இவர்களுடைய மகனும், மகள்களும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளார்கள். இதனால் கணவன்-மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் மாணிக்கத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் புஞ்ைசபுளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரங்கநாயகி உடன் இருந்து கணவரை கவனித்து வந்தார். இதற்கிடையே மாணிக்கத்தின் மகள் சாந்தி தந்தையின் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த மர்ம நபர்கள் யாரோ பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவையும் உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார்கள். ஈரோட்டில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.