புதுக்கோட்டையில் இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் 10 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.;

Update: 2022-09-04 18:05 GMT

போலீஸ் இன்ஸ்பெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கோபிநாத் (வயது 50). இவருடைய வீடு புதுக்கோட்டை அழகர் நகரில் உள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் ேகாவையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, அவருடைய உறவினர் ஒருவர் இரவு நேரத்தில் கோபிநாத்தின் வீட்டு விளக்கை எரியவிட்டு காலையில் வந்து விளக்கை அணைத்து விட்டு சென்று வந்துள்ளார்.

வீட்டின் பூட்டு உடைப்பு

இந்தநிலையில் நேற்று காலை வீட்டுக்கு வந்து உறவினர் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசுக்கு தகவல் அளித்தார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு நின்றுவிட்டது.

10 பவுன் நகைகள் திருட்டு

இன்ஸ்பெக்டர் கோபிநாத் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த பீரோக்களையும் உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 10 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இருப்பினும் கோபிநாத் புதுக்கோட்டைக்கு திரும்பிய பிறகு தான் எவ்வளவு பவுன் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்