தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 1,581 பேர் நியமனம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 1,581 பேர் நியமனம்

Update: 2023-04-27 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 1,581 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1,581 பேருக்கு பணிநியமன ஆணை

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 5 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலமாக 1,581 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் 92 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதில் 37 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

போட்டித்தேர்வுக்கான பயிற்சி

குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதில் 18 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். குரூப் தொகுதி-1ல் 18 மாணவ, மாணவியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கான போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் 91 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோடைகால பயிற்சி முகாம்

கலெக்டர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோருக்கு திருவாரூரில் உள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

அதன்படி விளையாட்டு பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மாணவராக அல்லாதோர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக்கொண்டு பயிற்சியளிக்கப்படும்.

சான்றிதழ்கள்

பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோர் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்