பெருந்தலையூரில் ஆபத்தான ஆற்று பாலம்தடுப்புச்சுவர் கட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை
பெருந்தலையூர் பகுதியில் ஆபத்தாக உள்ள ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பெருந்தலையூர் பகுதியில் ஆபத்தாக உள்ள ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான ஆற்று பாலம்
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கும், பவானி ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கவுந்தப்பாடியில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் ரோட்டில் பெருந்தலையூர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டப்படாமல் கம்பி வேலி அமைக்க பயன்படுத்தும் தூண்கள் மட்டுமே வைத்துள்ளனர். இதனால் இந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆபத்தான இந்த பாலத்தின் ஓரமாக நடந்து செல்லும் பொதுமக்களும் தவறி ஆற்றில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தினமும் உயிரை கையில் பிடித்தபடி பாலத்தை கடந்து செல்கின்றனர்.
தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாலம் குறுகலாக உள்ளதால் ஒரு வாகனத்திற்கு இன்னொரு வாகனம் வழி விடும்போது எங்கே பாலத்தில் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது.
எனவே பாலத்தில் மின்விளக்குகள் அமைத்து இருபுறமும் சுற்றுச்சுவர்கள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.