பெரியகுளத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போலி பீடிகள் பறிமுதல்

பெரியகுளத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போலி பீடிகளை போலீசாா் பறிமுதல் செய்தனர்;

Update: 2022-08-26 16:02 GMT

பெரியகுளம் பகுதியில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் மூட்டைகளுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டார். பின்னர் மற்றொருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து மூட்டைகளை சோதனை செய்தனர்.

அதில் ஒரு கம்பெனி பெயரில் பீடி கட்டுகள் இருந்தன. பின்னர் அந்த கம்பெனி அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது அது அந்த கம்பெனி பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பீடிகள் என்பது தெரியவந்தது. அவற்ைற பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள கீழசுரண்டையை சேர்ந்த தங்கராஜ் (வயது 55) என்பதும், தப்பி ஓடியவர் பெரியகுளம் பகுதியை சோ்ந்த மாமன் ராதா என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். தப்பி ஓடிய மாமன் ராதா மற்றும் போலி பீடிகளை தயாரித்து விற்பனை செய்த நபரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடிகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்