பெரம்பலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்
பெரம்பலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து போட்டிகள் தொடங்கப்படுகிறது.
இந்த போட்டியானது 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களில் ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் நடத்தப்படுகிறது. 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் ஓட்டப்போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
பரிசுத்தொகை
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். எனவே போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவர்களது வங்கிக்கணக்கின் விவரம் அடங்கிய புத்தக தெளிவான நகலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகள் நடப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதமும், 2-ம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம் வீதமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1,000 வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலையாக வழங்கப்படும்.
நாளைக்குள் முன்பதிவு...
நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ள தடங்கள் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் அறிவிக்கப்படும். எனவே, பெரம்பலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வயது சான்றிதழ், பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து உடற்தகுதி சான்று, வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் தங்கள் பெயரினை மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் முன்பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.பெரம்பலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.