மன்னார்குடியில், தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
வேளாண் துறை சார்பில் மன்னார்குடியில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வேளாண் துறை சார்பில் மன்னார்குடியில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை ஏற்றம்
தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்களின் விலை முன் எப்போதும் அளவுக்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சின்னவெங்காயத்தின் விலை இரட்டை சதத்தை கடந்து விற்பதால் அதை உரிக்காமலேயே கண்ணீர் வருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
தக்காளி இல்லாமல் சமையலே நடக்காது என்ற சூழலில் அதன் விலையும் தொடர்ந்து 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் கிடைக்கும் கூலி மூலம் வாழ்க்கை நடத்தும் நிலையில் உள்ளவர்கள் காய்கறிகளின் திடீர் விலை உயர்வால் எப்படி சமையல் செய்து? என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார்கள்.
ரேஷன் கடைகள்
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தக்காளி கிலோ ரூ.100-க்கும் அதிகமாகத்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து ரேஷன் கடைகள் மூலமாக தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழக அரசு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலமாகவும் தக்காளியை குறைந்த விலையில் விற்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி மன்னார்குடி உழவர் சந்தையில் நேற்று தோட்டக்கலை வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்துறை சார்பில் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விற்று தீர்ந்தது
நேற்றைய தக்காளி விலை கிலோ ரூ.114 என்ற அளவில் விற்பனையானது. இந்த நிலையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தக்காளியை வாங்கி சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அனைத்து தக்காளியும் விற்று தீர்ந்து விட்டது.