மைதீன் ஆண்டவர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
கம்பத்தில் மைதீன் ஆண்டவர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
கம்பம் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது, செந்தில் (அ.தி.மு.க.) நகராட்சி குப்பை கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி குப்பை வண்டிகளில் பேட்டரி திருடு போனது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
தலைவர்: போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முருகன் (அ.தி.மு.க.):- அரசமரம் சந்திப்பு மற்றும் போக்குவரத்து சிக்னலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
மணிகண்டன் (தி.மு.க.):- பொறியாளரிடம் அடிப்படை வசதி குறித்து கோரிக்கை வைத்தால், நகராட்சியில் நிதி பற்றாக்குறை என கூறுகிறார். பொறியாளர் நிதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கமிஷனர் பாலமுருகன்:- நிதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சொத்து வரி உயர்வு மூலம் வருவாய் ரூ.1 கோடியே 39 லட்சம் அதிகரிக்கும், மேலும் பல்வேறு வகையில் நகராட்சி நிதியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாதிக் (தி.மு.க):- மைதீன் ஆண்டவர்புரம் பகுதியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இதையடுத்து அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.