மதுரையில் 8,957 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்- 182 பேர் தேர்வு எழுத வரவில்லை
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வெழுத மதுரை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 9,139 மாணவ, மாணவிகளில் 182 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 8,957 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.;
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வெழுத மதுரை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 9,139 மாணவ, மாணவிகளில் 182 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 8,957 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு
மதுரையில் பல்வேறு மையங்களில் நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடந்தது. இதற்காக தேர்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் மதியம் 1.30 மணிக்குள் வந்து விட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் பகல் 11 மணிக்கு அந்தந்த தேர்வு மையங்களுக்கு தங்களது பெற்றோர், உறவினர்களுடன் வந்திருந்தனர். உடை, ஆபரண கட்டுப்பாடுகளுக்காக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வண்டியின் சாவியை உள்ளே கொண்டு செல்லவும், பைகளை உள்ளே கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதால் சிரமத்திற்கு ஆளாயினர். தேர்வுக்கான பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் தேர்வு நடத்துபவர்களால் வழங்கப்பட்டன. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே, நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தேர்வு மையத்தின் கடும் கட்டுப்பாடுகள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கியது.
182 மாணவர்கள்
மாவட்டம் முழுவதும் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 9,139 மாணவ, மாணவிகளில் 182 பேர் மட்டும் நேற்று தேர்வெழுத வரவில்லை. 8,957 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு கண்காணிப்பாளர் தலைமையில் தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 24 அறைகள் முதல் 44 அறைகள் வரை ஒதுக்கப்பட்டிருந்தன.
சி.இ.ஓ.ஏ., ஓம் சாதனா, யாதவா ஆண்கள் கல்லூரி, கேந்திரிய வித்யாலயா-2, யாதவா பெண்கள் கல்லூரி, சி.இ.ஓ.ஏ. உயர்நிலைப்பள்ளி, அத்யபனா பள்ளி, விரகனூர் வேலம்மாள், நாய்ஸ் மெட்ரிகுலேசன், எஸ்.இ.வி. மெட்ரிகுலேசன், கேம்.எம்.ஆர். இன்டர்நேசனல் மற்றும் மகாத்மா மாண்டிசோரி பள்ளி ஆகிய இடங்களிலும், தேனி முத்துத்தேவன் பட்டி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அனுமதியாக தேர்வு அறைக்குள் குடிதண்ணீர், பிஸ்கட் கொண்டு செல்லவும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமையின் மதுரை மாநகர ஒருங்கிணைப்பாளர் பி.ஹம்சபிரியா செய்திருந்தார்.