குறைந்த செலவில் சிறுதானிய சாகுபடியில் அதிக லாபம் ஈட்டலாம்

குறைந்த செலவில் சிறுதானிய சாகுபடியில் அதிக லாபம் ஈட்டலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-23 00:15 IST

குறைந்த செலவில் சிறுதானிய சாகுபடியில் அதிக லாபம் ஈட்டலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊட்டச்சத்து

சிறுதானிய உணவு வகைகள் பற்றி மக்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், மக்கள் அதிக அளவில் சிறுதானிய உணவுகளை விரும்புகின்றனர். மக்கள் மத்தியில் நிலவும் நவீன உணவுப் பழக்கத்தின் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் மக்களை எளிதில் பாதித்து விடுகின்றன.உலக மக்கள் தொகையில் 45 சதவீத மக்கள் பயன்படுத்தும் உணவுகளில் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லை என்று சர்வதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களும் மற்றும் அரிசி, கோதுமை போன்ற உணவு வகைகளே மக்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், மனிதர்களின் ஆயுள் காலம் குறையத் தொடங்கிவிட்டது.

1980-ம் ஆண்டு 15 லட்சம் எக்டேர் பரப்பளவில் இந்தியாவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவிலேயே சிறுதானிய சாகுபடி செய்யப்படுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுதானியங்களை தேடி செல்லும் மக்கள்

மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக சிறுதானியங்களைப் பற்றி மக்கள் அதிகம் அறியத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் சிறுதானியங்களை தேடிச்சென்று உண்ணும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகை மீண்டும் வளரத் தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் வரகு, கம்பு, குதிரைவாலி, திணை, சாமை, ராகி ஆகியவற்றின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தற்போது விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிக லாபம் ஈட்டலாம்

மேலும், சிறுதானிய சாகுபடிக்கு மற்ற பயிர்களுக்கு செலவிடும் தொகையை விட மிகக் குறைவாக செலவிட்டாலே போதுமானது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மேலும், குறைந்த அளவு தண்ணீர், குறைந்த பராமரிப்பு போன்றவை விவசாயிகளுக்கு கூடுதல் பயனாக அமைந்திருக்கின்றன. இது மட்டுமல்லாமல், சிறுதானிய விளைச்சலுக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை என்பதால், அதற்காகும் செலவும் மிச்சமாகிறது. நடப்பாண்டு, 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக' கொண்டாடப்பட்டு இந்த வேளையில் சிறுதானிய பயிர் அதிக அளவில் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்