கும்பகோணத்தில், பா.ஜ.க.வினர் சாலைமறியல்

கும்பகோணத்தில், பா.ஜ.க.வினர் சாலைமறியல்

Update: 2022-09-01 19:52 GMT

கும்பகோணம்

விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு முன்னதாக அனுமதி தராததை கண்டித்து கும்பகோணத்தில் பா.ஜ.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கும்பகோணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலத்துக்கு போலீசார் நேற்று மாலை 7 மணிக்கு அனுமதி அளித்திருந்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாக்குவாதம்

இதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கும்பகோணம் மகாமக குளம் பகுதிக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டன. மாலை 6 மணி அளவில் விநாயகர் சிலைகள் அனைத்தும் மகாமக குளம் பகுதியை வந்தடைந்தன. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பா.ஜ.க. தஞ்சை வடக்கு மாவட்டத்தலைவர் சதீஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வினர் உடனடியாக விநாயகர் ஊர்வலத்தை தொடங்க வேண்டும் என போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்ல 7 மணிக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஊர்வலத்தை தொடங்க கூடாது என கூறினர். ஆனால் பா.ஜ.க.வினர் போலீசார் தடையை மீறி 6.30 மணிக்கே ஊர்வலம் செல்ல புறப்பட்டனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 7 மணிக்கு ஊர்வலம் தொடங்கும் என அவர்கள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் 7 மணி வரை காத்திருந்து விநாயகர் ஊர்வலத்தை தொடங்கினர்.

சாலைமறியல்

அதனை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு முன்னதாக அனுமதி தராத போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் கும்பகோணத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விநாயகர் ஊர்வலம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில், பெரிய கடை தெரு வழியாக சென்று காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் முடிவடைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்