கும்பகோணத்தில், காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
கும்பகோணத்தில், காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் 31 முதல் 35 வார்டு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மாமன்ற உறுப்பினர் பத்ம. குமரேசன் தலைமையில் நேற்று காலை கும்பகோணம்- தஞ்சை சாலையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 3 நாட்களுக்குள் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.