கவுந்தப்பாடியில்நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கவுந்தப்பாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.;
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் கே.பி.தங்கமணி தலைமை தாங்கினார். யு8பி பாசனசபை தலைவர் பி.ஆர்.ஏகாம்பரம், கூட்டுறவு வங்கி தலைவர் பா.அ.சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மா.சாந்தாமணி கலந்து கொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் ஆர்.பவானி, கொள்முதல் மையஅலுவலர் சங்கர், துணை வேளாண்மை அலுவலர் பி.அப்புசாமி, கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு இணை செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, யு 8 பி பாசன சபை செயலாளர் பி.சி.செங்கோட்டையன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சீனிவாசன், தடப்பள்ளி பாசனசபை பொருளாளர் மோகன் குமாரமங்கலம், உழவர் விவாதகுழு அமைப்பாளர் பி.எம்.வேலப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி கூறும்போது, 'விவசாயிகள் வயலில் விளைந்த நெல்லை கொள்முதல் மையத்துக்கு கொண்டு வரும் போது நெல் நடவு செய்த நிலத்தின் பட்டா, ஆர்எஸ் ஆர், கிராம நிர்வாக அலுவலர் சான்று அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு முன்பக்க நகல் கொண்டு வர வேண்டும். குண்டுரக நெல் ஒரு கிலோ 21 ரூபாய் 15 காசும், சன்னரக நெல் கிலோ 21 ரூபாய் காசும் கொள்முதல் செய்வார்கள். நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துடன் சுத்தமாக இருக்க வேண்டும்' என்றார்.