கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2023-09-20 21:50 GMT

கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 3 நாட்களாக பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சிலைகளை கரைப்பதற்காக வாகனங்களில் வைத்து கவுந்தப்பாடி-சத்தி மெயின்ரோட்டில் உள்ள கொட்டாயிமேடு அருகே கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கே.சி.முருகேசன், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறறது. இதில் சுமுக முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக கவுந்தப்பாடி நால்ரோடு, ஆப்பக்கூடல் சாலை வழியாக பெருந்தலையூர் பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைத்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில் தனியார் அமைப்பு சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலையை கரைப்பதற்காக நேற்று மாலை பகுடுதுறையில் உள்ள பவானி ஆற்றில் கரைப்பதற்காக வாகனத்தில் வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துக்கொண்டு ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். ஆதிபராசக்தி கோவில் வழியாக சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கிருந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என மாற்று பாதையில் செல்லுமாறு கூறினர். இதனை கண்டித்து ஊர்வலமாக வந்தவர்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மாரிமுத்து, புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் விநாயகர் சிலை வாகனம் மட்டும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பவானிசாகர் ரோட்டின் வழியாக சென்று பவானிசாகர் ஆற்றில் கரைக்கலாம் என தாசில்தார், போலீசார் கூறினர். இதை ஏற்றுக்கொண்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்