கடம்பூர் வனப்பகுதியில்சருகு மானை வேட்டையாடிய 2 பேர் கைது
கடம்பூர் வனப்பகுதியில் சருகு மானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்
கடம்பூர் வனப்பகுதியில் சருகு மானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரோந்து சென்றனர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட குத்தியாலத்தூர் காப்புக்காடு தும்பக்கட்டை சரக வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் 3 வேட்டை நாய்களுடன் நின்று கொண்டு இருந்தனர். வனத்துறையினரை அவர்கள் பார்த்ததும் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் சுற்்றிவளைத்து பிடித்தனர்.
கைது
அப்போது அவர்கள் கையில் சாக்குப்பை ஒன்றை வைத்திருந்தனர். அதனை வனத்துறையினர் சோதனை செய்தனர். அதில் அபூர்வ இனமான சருகு மானை வேட்டையாடி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள், 'கடம்பூரை அடுத்த அணைக்கரை கிணத்தொட்டி பகுதியை சேர்ந்த வீரன் (வயது 22) மற்றும் ராமர் (27) என்பதும், இவர்கள் 2 பேரும் அத்துமீறி வனப்பகுதிக்குள் சென்று வேட்டை நாய்களுடன் சருகுமானை வேட்டையாடியதும், தெரிய வந்தது'. இதையடுத்து கடம்பூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
2 பேரிடம் இருந்து சருகு மான் மற்றும் 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.