தேனியில் 32 வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல்
தேனியில் 32 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது;
தேனி மாவட்டத்தில் பஸ், லாரிகளில் 'ஏர்ஹாரன்' (காற்று ஒலிப்பான்) பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்யும் வகையில், பழனிசெட்டிபட்டி வட்டார போக்குவரத்து சோதனை சாவடி முன்பு தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெட்சணாமூர்த்தி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். அதுபோல் தேனி பழைய பஸ் நிலையத்திலும் வாகன தணிக்கை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 32 வாகனங்களில் இருந்து ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏர்ஹாரன்கள் பயன்படுத்திய வாகனங்களின் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 8 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.