தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அருகே ஆழ்துளை கிணறுகளில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ஆரம்ப சுகாதார நிலையம்
தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் சங்கத்தினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மடத்தூர், கணேஷ்நகர் ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக அளவில் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு கர்ப்பிணி பெண்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்கு ஸ்ட்ரெட்சர், வீல்சேர் போன்ற வசதிகள் இல்லை. அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்புலன்சு வசதி இல்லை. அதே போன்று ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற வசதிகளும் இல்லை. ஆகையால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி-கோவை இடையே ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த ரெயில் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் கோவைக்கு சென்று வருகின்றனர். முதியவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் தூத்துக்குடி-கோவை ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் தலைமையில், அல்லிகுளம் பஞ்சாயத்து முருகன் நகர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நிலத்தடி நீரை முறைகேடாக உறிஞ்சி விற்பனை செய்வதைதடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் பஞ்சாயத்து முருகன்நகர் பகுதியில் தனிநபர்கள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாத நிலை உருவாகி உள்ளது. ஆகையால் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடி, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதில் நாம்தமிழர் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ், தூத்துக்குடி தொகுதி செயலாளர் மாரி சிவா, ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ், மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் செயலாளர் பட்டாணி, மகளிர் பாசறை செயலாளர் மெகர்நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தர்ணா
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி லூர்து ஜான்சி. இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென கலெக்டர் அலுவலக வாசலில் உறவினருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனது முன்னோர் அனுபவ பாத்தியப்பட்ட நத்தம் புறம்போக்கு அரசு நிலத்தை 3 தலைமுறையாக விவசாயம் செய்து வந்தோம். தற்போது சிலர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் நாங்கள் பயன்படுத்தி வந்த இடத்துக்கு எங்களுக்கு பட்டா தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.