கோவில்பட்டி அரசு அலுவலகங்கள் முன்புஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் பணியாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம், வணிகவரி அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வணிகவரி அலுவலகம்
வணிகவரி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணை தலைவர் நவநீத கண்ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் பிரான்சிஸ், மாநில துணை தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர், மாவட்ட துணை தலைவர் சின்னத்தம்பி, மாவட்ட துணை செயலாளர் உமாதேவி, மாவட்ட இணை செயலாளர் செல்லத் துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அந்தந்த அலுவலகத்தில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.