ஈரோடு கிழக்கு தொகுதியில்இன்றே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்;அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இன்றே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.;

Update: 2023-01-27 21:13 GMT

இன்றே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

தேர்தல் பணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 பகுதிகள் உள்ளன. அசோகபுரம், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார்நகர், வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு வாக்குச்சாவடிகள் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல், ஏற்கனவே பெற்ற வாக்குகள் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து உள்ளோம். நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள கட்சியினருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். நாளையில் இருந்து (அதாவது இன்று முதல்) தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். வீடு, வீடாக சென்று வீட்டில் வாக்காளர்கள் இருக்கிறார்களா? இறந்தவர்களின் விவரம் போன்றவற்றை சேகரிக்க வேண்டும்.

3 நாட்கள்

கிழக்கு தொகுதியில் பலர் வெளியூர் சென்று விட்டார்கள். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பலர் வேலையில்லாத காரணத்தால் தொகுதியில் இல்லை என்ற தகவல் வந்துள்ளது. அதனால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கவனமாக விவரங்களை சேகரிக்க வேண்டும். இந்த பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துன்பம், துயரம், வேதனைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு நோட்டீசு வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுங்கள். அவர்கள் ஆர்வமாக இருந்தாலும், சிறிது நேரம் பணியாற்றிவிட்டு அனுப்பி வைத்து விடுங்கள்.

கல்விக்கடன்

வீட்டு வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியன உயர்த்தப்பட்டது. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்கள். 20 மாதங்களாக ஆட்சியில் இருந்தும் நிறைவேற்றப்படவில்லை.

கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. முதியோர் உதவித்தொகை, ஏழை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் என பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தைத்தான் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரமாண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. ஈரோட்டில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தை நானே அடிக்கல் நாட்டி வைத்து, திறந்தும் வைத்தேன்.

திராவிட மாடல் ஆட்சி

அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு படிப்பதற்காக 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு நமது ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 564 ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்அடைந்து இருக்கிறார்கள். எல்லாமே நாம் தான் செய்தது. தி.மு.க. ஆட்சியில் ஒரு துரும்பு கூட செய்யவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. அப்போது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவரே முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஏன் அந்த தொகையை கொடுக்கவில்லை? கடந்த ஆண்டு 21 வகையான பொருட்கள் கொடுத்தார்கள். வெளிமாநிலங்களில் இருந்த கொள்முதல் செய்ததால் தரமற்ற பொருட்களாக இருந்தது. ஈரோட்டில் வெல்லம் மார்க்கெட் உள்ளது. ஆனால் இங்கே கொள்முதல் செய்தால் கமிஷன் கிடைக்காது என்று வெளிமாநிலத்தில் இருந்து வாங்கினார்கள். இந்த ஆண்டு நாம் அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் ரூ.1,000 மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்