திண்டுக்கல்லில் 9 ஆயிரத்து 887 பேர் போலீஸ் தேர்வு எழுதினர்

திண்டுக்கல்லில் நடந்த இரண்டாம்நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9 ஆயிரத்து 887 பேர் எழுதினர். 1, 927 பேர் தேர்வு எழுத வரவில்லை.;

Update:2022-11-28 00:30 IST

எழுத்து தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இரண்டாம் நிலை போலீஸ், சிறைத்துறை போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உள்ளிட்ட பணிக்காக நடைபெறும் எழுத்து தேர்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தேர்வுக்காக ஆண்கள் 9 ஆயிரத்து 741 பேர், பெண்கள் 2 ஆயிரத்து 72 பேர் மற்றும் திருநங்கை ஒருவர் என மொத்தம் 11 ஆயிரத்து 814 விண்ணப்பித்திருந்தனர். இதையொட்டி நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக, காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்கள் முன்பு தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டுடன் வந்தவர்கள், தீவிர போலீஸ் சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

9 ஆயிரத்து 887 பேர்

மேலும் எலக்ட்ரானிக்ஸ் கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோன்று முக கவசம் அணிந்து வந்தவர்கள், முக கவசத்தை அகற்றிய பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். எழுத்து தேர்வுக்காக 11 ஆயிரத்து 814 பேர் விண்ணப்பித்த நிலையில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 887 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இதில் 1,927 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதையொட்டி தேர்வு மேற்பார்வையாளரான போலீஸ் ஐ.ஜி. பாபு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்