ஆட்டோவில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை விரக்தியில் கள்ளக்காதலியும் உயிரை மாய்த்துக்கொண்டார்

திருவேற்காட்டில் லோடு ஆட்டோவில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்த அவருடைய கள்ளக்காதலியும் தற்கொலை செய்தார்.;

Update: 2023-08-29 03:25 GMT

திருவேற்காடு,

திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). லோடு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய மகேஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மகேஷ், வீட்டின் அருகில் நிறுத்தி இருந்த தனது லோடு ஆட்டோவின் பின்பகுதியில் இருக்கும் இரும்பு கம்பியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மகேஷின் உறவினர்கள் அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார், மகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரவாயல் அடுத்த நூம்பல், ராஜூவ் நகரை சேர்ந்த மாலதி (44) என்பவர் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் போலீசார் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்த மாலதிக்கும், திருவேற்காட்டில் தற்கொலை செய்த லோடு ஆட்டோ டிரைவர் மகேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியும் வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு தனது கள்ளக்காதலன் மகேஷ், தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலதி, நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மகேஷ், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது தனது கள்ளக்காதலியுடனான தகராறில் இந்த முடிவை எடுத்தாரா? இதன் காரணமாக அவருடைய கள்ளக்காதலி மாலதி தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்