கடலூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ.70-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலூர் மாநகரில் அண்ணா மார்க்கெட், பான்பரி மார்க்கெட், பக்தவச்சலம் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. மேலும் திருப்பாதிரிப்புலியூர் அண்ணா பாலம் அருகில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தையும் செயல்படுகிறது.இந்த காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளும், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் விளையும் காய்கறிகளும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு
இந்நிலையில் காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் ஒரு கிலோ 34 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.70-க்கு விற்பனையாகிறது. கடலூர் உழவர் சந்தையில் கிலோ ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தற்போது இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரத்து குறைவாக உள்ளதால் மாவட்டத்தில் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.