கூடலூர் பகுதியில் முதல் போக நெல் நடவு பணி தீவிரம்
கூடலூர் பகுதியில் முதல் போக நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கூடலூர் தாமரைக்குளம், பி.டி.ஆர்.வட்டம், கப்பா மடை, வெட்டுக்காடு, ஜம்போடை, ஒழுகுவழி ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்காக விதை விதைத்து நாற்றுகளை வளர்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது நாற்றுகள் நன்கு வளர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் நாற்றுகளை பறித்து வயல்வெளிகளில் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் நடவு பணிக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து சரக்கு வாகனம் மூலம் ஆட்களை அழைத்து வந்து நடவு பணி நடக்கிறது.