செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சட்டமங்கலம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45), இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக உள்ள முத்துசாமியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவரது மனைவி அர்ச்சனா வீட்டை பூட்டி விட்டு தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள சித்தா ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டிவி போன்றவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து அர்ச்சனா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.