எட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில்ராணுவ வீரர் குத்திக்கொலை

எட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-17 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ராணுவ வீரர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் வேதமுத்து மகன் வேல்முருகன் (வயது 25). கடந்த 2017-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். அவர் விடுப்பில் தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்துக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் தூங்குவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.

ரத்த வெள்ளத்தில் பிணம்

நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் உடலில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரது அபயக்குரல் கேட்டு தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளி ஆகியோர் அங்கு ஓடி வந்தனர்.

சிறிது நேரத்தில் வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

குத்திக்கொலை

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) லோகேஸ்வரன், மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் வேல்முருகனை வெம்பூர் நடுத்தெருவை சேர்ந்த டிராக்டர் டிரைவரான மாரிச்சாமி (29) கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. அதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

முன்விரோதம்

மாரிச்சாமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. ராணுவ வீரர் வேல்முருகன் விடுப்பில் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்பில் இருந்தார். இதை அறிந்த மாரிச்சாமி, வேல்முருகனை கண்டித்தார். ஆனாலும் வேல்முருகன் அதை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணுடன் பழகி வந்தார்.

இதனால் மாரிச்சாமிக்கும், வேல்முருகனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து மாரிச்சாமி நேற்று முன்தினம் இரவு வேல்முருகனின் வீட்டின் மொட்டை மாடிக்கு ஏறிச்சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மாரிச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் வேல்முருகன் இறந்து விட்டார்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மாரிச்சாமியை பிடித்து கைது செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்