காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 6 மாதம் ஜெயில்

கோவில்பட்டியில் காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

Update: 2023-02-08 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மளிகைக்கடைக்காரரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து விரைவு நீதிமன்ற நீதிபதி முகமதுசாதிக் உசேன் உத்தரவிட்டார்.

ரூ.8 லட்சம் கடன்

கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவை சேர்ந்தவர் அ.மாரியப்பன் (வயது 60). இவர் பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த வேல்சாமி மனைவி வாசுகி (45) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி தனியார் வங்கி காசோலையை வாசுகி வழங்கினார்.

காசோலை மோசடி

இந்த காசோலையை மாரியப்பன் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லையென திரும்பியது. இதையடுத்து மாரியப்பன் கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் வாசுகி மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சாதிக் உசேன், வாசுகிக்கு 6 மாத கால சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார். ஒரு மாத காலத்திற்குள் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும், கட்ட தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மாரியப்பன் சார்பில் வழக்கறிஞர் ஆழ்வார்சாமி சிவக்குமார் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்